நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதுடன் ஒப்பிடும்போது எவ்வளவு பணத்தை நீங்கள் செலவழிக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக விளங்கியிருப்பது நல்லது. உங்களிடம் அதிக வட்டியுள்ள கடன் இருந்தால், முதலீடு செய்வதற்கு முன் கடனை அடைப்பதற்கான திட்டத்தை உருவாக்குவது உதவியாக இருக்கலாம்.


வரவுசெலவுத் திட்டமிடல்

வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்குவது எந்த வயதிலும் நீங்கள் தொடங்கக்கூடிய நிதிரீதியான சிறந்த பழக்கங்களில் ஒன்றாகும். உங்களின் பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பது தொடர்பான தெளிவான புரிதலை இது வழங்குவதுடன் நிதிரீதியாக உங்களுக்குப் பொருத்தமான முடிவுகளை எடுக்க உதவும்.

உங்களின் வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிக்கவும், கட்டணங்களைத் தொடர்ந்து செலுத்தவும், நிதிரீதியான உங்களின் இலக்குகளை அடைவதற்கு எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதைக் கண்டறியவும் ஒரு வரவுசெலவுத் திட்டம் உங்களுக்கு உதவ முடியும்.


சேமிப்பு

சேமிப்பு குறுகிய கால இலக்குகளை அடைய உதவுகிறது. புதியதொரு தொலைபேசிக்கான அல்லது கச்சேரி ஒன்றுக்குரிய நுழைவுச் சீட்டுக்கான சேமிப்புப்போல இவை நடுத்தர அளவானதாக இருக்கலாம். அல்லது எதிர்காலத்தில் நிச்சயமற்ற ஒரு நேரத்தில் உங்களுக்கு உதவுவதற்கான அவசர நிதி ஒன்றை உருவாக்குவதாக இருக்கலாம்.


பதிவு செய்யப்பட்ட திட்டங்கள்

நீங்கள் சேமிக்க உதவுவதற்காகக் கனடா அரசாங்கம் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. “பதிவு செய்யப்பட்ட திட்டங்கள்” என்று அழைக்கப்படும் இவை, பணத்தை அல்லது தகுதிவாய்ந்த முதலீடுகளை வைத்திருக்கக்கூடிய கணக்குகள் ஆகும்.

இந்தக் கணக்குகளை முதலீட்டுக் கணக்குகளாக அல்லது சேமிப்புக் கணக்குகளாகப் பயன்படுத்தலாம். இவை காசோலைக் கணக்குப் போன்ற அன்றாட பயன்பாட்டிற்கானவை அல்ல.