நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதுடன் ஒப்பிடும்போது எவ்வளவு பணத்தை நீங்கள் செலவழிக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக விளங்கியிருப்பது நல்லது. உங்களிடம் அதிக வட்டியுள்ள கடன் இருந்தால், முதலீடு செய்வதற்கு முன் கடனை அடைப்பதற்கான திட்டத்தை உருவாக்குவது உதவியாக இருக்கலாம்.


வரவுசெலவுத் திட்டமிடல்

வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்குவது எந்த வயதிலும் நீங்கள் தொடங்கக்கூடிய நிதிரீதியான சிறந்த பழக்கங்களில் ஒன்றாகும். உங்களின் பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பது தொடர்பான தெளிவான புரிதலை இது வழங்குவதுடன் நிதிரீதியாக உங்களுக்குப் பொருத்தமான முடிவுகளை எடுக்க உதவும்.

உங்களின் வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிக்கவும், கட்டணங்களைத் தொடர்ந்து செலுத்தவும், நிதிரீதியான உங்களின் இலக்குகளை அடைவதற்கு எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதைக் கண்டறியவும் ஒரு வரவுசெலவுத் திட்டம் உங்களுக்கு உதவ முடியும்.


சேமிப்பு

சேமிப்பு குறுகிய கால இலக்குகளை அடைய உதவுகிறது. புதியதொரு தொலைபேசிக்கான அல்லது கச்சேரி ஒன்றுக்குரிய நுழைவுச் சீட்டுக்கான சேமிப்புப்போல இவை நடுத்தர அளவானதாக இருக்கலாம். அல்லது எதிர்காலத்தில் நிச்சயமற்ற ஒரு நேரத்தில் உங்களுக்கு உதவுவதற்கான அவசர நிதி ஒன்றை உருவாக்குவதாக இருக்கலாம்.

பொதுவாக, நீங்கள் சேமிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்த ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பு இலக்குகள் உள்ளடக்குகின்றன்.

உதாரணத்துக்கு, மூன்று மாத வாழ்க்கைச் செலவுப் பெறுமதியையுடைய அவசர நிதியை நீங்கள் வைத்திருக்க விரும்பினால், உங்களின் தற்போதைய மாதாந்தச் செலவினங்களின் அடிப்படையில் நீங்கள் அதைக் கணக்கிட முடியும்.

உங்களின் பணப்புழக்கத்தைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு வாரமும் சேமிப்புக்கான பணத்தை நீங்கள் ஒதுக்கலாம். ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு நேரடிப் பணப் பரிமாற்றங்களை அமைப்பதன் மூலம் அதை ஒரு பழக்கமாக மாற்ற முயற்சியுங்கள்.

பணத்தைச் சேமிப்பதற்கான வழிகள்  பின்வருவனவற்றையும் உள்ளடக்குகின்றன:

  • உங்களின் ஊதியத்துக்கான காசோலை கிடைக்கும் அதே நாளில் அதனை வங்கியில் நேரடி வைப்புத் தொகையாகப் போடுவதற்கு ஒழுங்கு செய்தல்
  • உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் வரிப்பணத்தைக் கொண்டு சேமிப்புத் திட்டமொன்றை உருவாக்கல்
  • சேமிப்புப் பயன்பாடுகளைப் பயன்படுத்துதல் அல்லது உங்களின் இணைய வங்கியில் ‘rounding up (கிட்டிய டொலரின் அளவுக்கு மாற்றல்)’ அம்சங்களைப் பயன்படுத்தல்
  • வார இறுதியில் ஒரு ஜாடியில் மீதமுள்ள தாள்கள் மற்றும் நாணயங்களைச் சேகரித்தல்

சேமிப்பை ஒரு பழக்கமாக மாற்றுவது பயனளிக்கும். சிறிய அளவானாலும்கூட காலப்போக்கில் அது பெரியளவாகும்.

உங்களுக்குத் தேவைப்படும்போது நீங்கள் விரைவாக அணுகக்கூடிய ஒரு இடத்தில், சேமிப்புக் கணக்கு போன்ற பாதுகாப்பான ஒரு இடத்தில் உங்களின் சேமிப்பை வைத்திருங்கள். இந்தக் கணக்குகள் கூட்டு வட்டி மூலம் உங்களின் பணம் பெருக உதவும்.

சேமிப்பு மற்றும் காசோலைக் கணக்குகளிலேயே பொதுவாக மக்கள் விரைவில் செலவழிக்கத் திட்டமிடும் பணத்தை வைத்திருக்கின்றனர்.

அவசரத் தேவைகளுக்கான அல்லது பெரியளவிலான கொள்முதலுக்குக்கான சேமிப்புக்கு ஒரு சேமிப்புக் கணக்குப் பயன்படுத்தப்படலாம். தினசரி செலவினங்களுக்கு அல்லது கட்டணங்களைச் செலுத்துவதற்கு ஒரு காசோலைக் கணக்குப் பயன்படுத்தப்படலாம். முதலீட்டுக் கணக்கொன்று முதலீட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்.

நீங்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவரின் உதவியுடன் சேமிப்பு அல்லது காசோலைக் கணக்கை நீங்கள் ஆரம்பிக்கலாம். ஒரு கணக்கை ஆரம்பிப்பதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய 2 அடையாளச் சான்றுகள் உங்களிடம் இருக்க வேண்டும். ஒரு முதலீட்டுக் கணக்கை ஆரம்பிப்பதற்கு, உங்களின் பெற்றோர் அல்லது பேரர் உங்களுக்காக ஒரு நம்பிக்கை-நிதியக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.

இந்த வகையான கணக்குகளை வழங்கும் பல்வேறு வகையான நிதி நிறுவனங்கள் உள்ளன:

  • வங்கிகள் மற்றும் நம்பிக்கை நிறுவனங்கள்
  • கடன் சங்கங்கள் (Credit unions)
  • முதலீட்டு நிறுவனங்கள்

பதிவு செய்யப்பட்ட திட்டங்கள்

நீங்கள் சேமிக்க உதவுவதற்காகக் கனடா அரசாங்கம் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. “பதிவு செய்யப்பட்ட திட்டங்கள்” என்று அழைக்கப்படும் இவை, பணத்தை அல்லது தகுதிவாய்ந்த முதலீடுகளை வைத்திருக்கக்கூடிய கணக்குகள் ஆகும்.

இந்தக் கணக்குகளை முதலீட்டுக் கணக்குகளாக அல்லது சேமிப்புக் கணக்குகளாகப் பயன்படுத்தலாம். இவை காசோலைக் கணக்குப் போன்ற அன்றாட பயன்பாட்டிற்கானவை அல்ல.